என் முன்னோர்களின்
செயலைக்கண்டு நான் வெட்கப்படுகின்றேன், வருந்துகின்றேன், நான் மன்னிப்பு கேட்கிறேன்.
-இங்கிலாந்து பிரதமர்
டேவிட் கேமரூன்
இங்கிலாந்து பிரதமர்
மன வேதனையுடன் கூறிய இந்த வார்த்தைகளின் பின்னணியை அறிந்து கொள்ள வேண்டுமெனில் 94 வருடங்களுக்கு முன்பு (ஏப்ரல் 13.1919) நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒவ்வொரு இந்தியனும்
அறிந்து வைத்திருக்க வேண்டும்.
அதுவும் மனித உயிர்களின்
மாண்பறிந்து போராட்டக்களம் கண்டு வரும் ஒவ்வொரு தமிழரும் இவ்வரலாற்றை நினைவுகூர வேண்டியது
காலத்தின் கட்டாயமாகும்.
ஜாலியன் வாலாபாக்
படுகொலையை அறிந்து கொள்வதற்கு முன் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் பின்னணியை பார்ப்போம்.
இந்திய நாடு விடுதலை
அடைந்து 65 ஆண்டுகள் நிறைவடைந்து
விட்டன. ஆங்கிலேயருக்கு எதிரான இந்த விடுதலை போராட்டமானது கத்தியின்றி யுத்தமின்றி
அகிம்சை வழியில் கிடைத்து விட்டதாக இன்றைய கல்வி கூடங்களிலும், கல்லூரிகளிலும் போதிக்கப்பட்டு வருகின்றது. உண்மை
வரலாற்றை தெரிந்து கொண்டால், மாணவர்கள் மத்தியில்
போராட்ட குணம் வெகுண்டெழும். எனவே, ஆட்சியாளர்களின் திட்டமிட்ட
சூழ்ச்சி, ஆங்கிலேயரின் அடக்கு
முறையை சகித்துக் கொண்டு அகிம்சை வழியில் போராடியதால் ஆங்கிலேயனே பரிதாபப்பட்டு விடுதலையை
வழங்கி விட்டான் என்பது போன்ற வரலாற்றை தான்
நாம் படித்து வருகிறோம். விடுதலை போராட்ட வரலாறு என்பது காந்தி, நேரு, பட்டேல் உள்ளிட்டோரோடு மட்டுமே தொடர்புடையது போன்ற பிம்பம் இன்றைய தலைமுறையினரிடத்தில்
போதிக்கப்பட்டு வருகின்றது.
200 ஆண்டுகால இந்த சுதந்திர
போராட்டம், கரடுமுரடான புரட்சி
பாதையில் பயணித்து, தன்னிகரில்லா தியாகத்தில்
விளைந்த தன்னலமற்ற தலைவர்கள் பலரின் உயிரையும், உடமையும், கோடிக்கணக்கான பொருளாதாரத்தையும் கொண்டு கட்டி எழுப்பப்பட்டது
என்பதனை உலகுக்கு சொல்ல ஏன் தயக்கம்?
1806 வேலூர் புரட்சி தொடங்கி
பல்வேறுபட்ட இயக்கங்கள், அமைப்புகள் புரட்சி
படைகள் என செங்குருதியில் எழுதப்பட்ட வரலாற்றின் உண்மை பக்கங்கள் வேண்டுமென்றே ஏன்
மறைக்கப்பட வேண்டும்?
1871 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் ஆங்கிலேயே ஆட்சியாளர்களால்
புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் மீது பல்வேறு சதி வழக்குகள் போடப்பட்டு பல்லாயிரக்கணக்கான புரட்சி வீரர்களின்
உயிர்கள் சிந்தப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேய அடிமைத்தனத்தை
எதிர்த்து போரிட்ட மன்னர்கள் வரிசையில் இரண்டாம் ‘பகதூர் ஷா ஜஃபர்’ முதல் இடத்தை பிடிக்கிறார். 1857ல் நடைபெற்ற விடுதலை போரை சிப்பாய் கலகம் என கொச்சைப்படுத்திவருகின்றனர்.
ஆனால், 1900ம் ஆண்டு டிசம்பர்
மாதத்தில் சோவியத் ரஷ்யாவில் புரட்சி இயக்கத்தால் வெளியிடப்பட்ட “இஸ்க்ரா” என்ற பத்திரிகையின்
முதல் இதழில் புரட்சியாளர் லெனின் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், இந்தியாவில் 1857ல் நடந்த புரட்சியே முதல் விடுதலைப்போர் என்று வர்ணித்துள்ளõர். அந்த அளவிற்கு ஒரு நீண்ட நெடிய போராட்ட வரலாறு
மக்களுக்கு மறக்கடிக்கப்படுகிறது. அதே போன்று 1871ம் ஆண்டு ஆங்கிலேயர்களை வீறுகொண்டு எதிர்த்த மற்றொரு
இயக்கம் ‘வஹாபி’
இயக்கமாகும்.
பாட்னா முதல் வங்காளம்
வரை வஹாபி இயக்கத்தை வழிநடத்தி சென்ற அமீர்கானையும் அவருடன் சேர்த்து ஏழு முக்கிய பொறுப்புதாரிகளையும்
கைது செய்தது ஆங்கிலேய அரசு. வஹாபி தலைவர் அமீர்கானை நாடு கடத்த உத்தரவிட்டதை தாங்கிக்
கொள்ள முடியாத மற்றொரு வீரன் ‘அப்துல்லா’
நாடு கடத்த வேண்டும் என உத்தரவிட்ட
நீதிபதி நார்மனை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்தான். இச்சம்பவத்தினால் ஆத்திரமடைந்த
ஆங்கிலேயே அரசு அப்துல்லாவை உடனடியாக தூக்கில் போட்டது, மட்டுமல்லாமல் இறந்த உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம்
செய்யவிடாமல், உடலை எரித்துவிட்டது.
இது வஹாபி இயக்க தோழர்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியது.
அந்தமான் தனிமைச்சிறையில் அதே வழக்கில் அடைக்கப்பட்ட
ஷேர் அலி என்ற வஹாபி வீரனுக்கு இச்செய்தி மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அதற்காக பழி
தீர்க்க தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தான் ஷேர் அலி. அதற்கான நாளும்
வந்தது. அந்தமான் சிறைக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட லார்டு மேயோ என்ற ஆங்கிலேயே
வைஸ்ராய் தீவிர ஆங்கிலேய வெறிபிடித்தவன். தொடர்ந்து இந்தியர்கள் மற்றும் இந்திய கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தியும்,
கேவலப்படுத்தியும் வந்தான்.
ஒருநாள் லார்டு மேயோ கைதிகளை ஒவ்வொருவராக பார்வையிட்டுக்
கொண்டு ஏளனம் செய்தவனாக வந்து கொண்டிருந்தான். அப்போது ஷேர் அலி அடைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தை நெருங்கியதுதான் தாமதம் தனது இரும்புகரம்
கொண்டு லார்டு மேயோவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தான் இம்மாவீரன்.
வஹாபிகளின் புரட்சி
தான்ஆங்கிலேயர்களால் போடப்பட்ட முதல் சதி வழக்காக வரலாற்றில் இன்றும் இடம் பெற்றுள்ளது.
இந்திய அளவில் ஆங்கிலேயர்களால் போடப்பட்ட சதி வழக்குகள் ஏராளம் என்றாலும், அதில் மிகவும் பிரசித்தி பெற்ற சதி வழக்குகள் 33 என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இரண்டாம் லாகூர் சதி
இரண்டாம் லாகூர் சதி
இரண்டாம் லாகூர் சதி
வழக்கு மட்டுமே இன்றளவும் சிலரால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றது. காரணம்,
இவ்வழக்கில் தொடர்புடைய பகத்சிங்,
சுக்தேவ், ராஜ குரு மூவரையும் ஆங்கிலேயர் தூக்கில் போட்டனர். இம் மாவீரர்களை நாம்
மதிக்கின்றோம். அதேவேளை முதல் சதி வழக்கான வஹாபி சதி வழக்கில் 50 வஹாபி வீரர்களை பீரங்கியின் முன் நிற்கவைத்து பிளந்தனர் ஆங்கிலேயர்கள். அந்த காலகட்டத்தில்
மட்டும் 50 இமாம்களை டெல்லி
வீதியில் அமைந்துள்ள மரங்களில் தூக்கிலிட்டு கொலை செய்தனர் ஆங்கிலேயர்கள். இதுவும்
போராட்டம்தான். ஏன் இவ்வரலாற்றை திட்டமிட்டு மறைக்க வேண்டும். இதுபோன்றதொரு பின்னணியைக் கொண்டதுதான் ஜாலியன் வாலாபாக்
படுகொலை.
ஜெனரல் டயர்
டாக்டர் சைஃபுத்தீன் கிச்சுலு
ஜாலியன் வாலாபாக்
அல்லது அமிர்தரஸ் படுகொலை
1919ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற இப்படுகொலை சம்பவத்திற்கு மிகப்பெரிய
சரித்திர பின்னணி உண்டு. இப்படுகொலை நடந்து
94 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்
அது விட்டுச் சென்ற தடங்கள், ரணங்கள், இன்றும் அழியா சின்னமாக அமிர்தசரஸில் சாட்சி அளிக்கின்றன.
கடந்த மாதங்களில்
இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜாலியன் வாலாபாக் சென்று பார்வையிட்டு “என் முன்னோர்களின் செயலைக்கண்டு நான் வெட்கப்படுகின்றேன், வருந்துகின்றேன், நான் மன்னிப்பு கேட்கிறேன்”
என்பதாக செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
94 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஜாலியன் வாலாபாக்
செல்லக்கூடியவர்களின் நெஞ்சை பிளக்கும் அந்தக் கோர சம்பவம் நடைபெற காரணம் என்ன? யாருக்காக கூட்டப்பட்ட கூட்டம் அது? அதில் பங்கு கொண்டவர்கள் யார்? அதன் தலைமை யார்?
என்பது போன்ற கேள்விக்கு பதில்
இல்லை. வரலாறு மறைக்கிறது.
ஜாலியன் வாலாபாக்
படுகொலையின் பின்னணி
இந்தியாவின் பஞ்சாப்
மாகாணத்தின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919ம் ஆணடு ஏப்ரல் 13ல் ரெஜினால்ட் டயர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில்
ஆங்கிலேய ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டு நிகழ்வில் ஆண்கள்,
பெண்கள், குழந்தைகள் என பலர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது
மட்டுமே வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. இதில் அறியப்படாத, மறைக்கப்பட்ட சம்பவங்கள் இன்னும் பல இருக்கின்றன.
1917ம் ஆண்டு நீதிபதி
ஏ.டி. ரௌலட் என்பவர் தலைமையில் பார்ப்பன நீதிபதி சி.வி. குமாரசாமி சாஸ்திரி உள்ளிட்ட
நால்வர் குழு இந்திய அரசியல் நிலையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தது. அதற்கு பெயர்
தான் ‘ரௌலட் சட்டம்’.
இச்சட்டம் இப்போதைய தடா,
பொடா, யுஏபிஏ போன்ற அடக்குமுறை சட்டத்தை போன்றது. எனவே
இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களிடையே இச்சட்டம் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் ரௌலட் சட்டத்தை திரும்ப பெற வேண்டி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அந்த வகையில் பஞ்சாப்
மாகாணத்தில் ரௌலட் சட்டத்தை எதிர்த்ததன் பின்னணியில் ஏற்பட்ட நிகழ்வே ஜாலியன் வாலாபாக்
படுகொலை.
டாக்டர் சைஃபுத்தீன்
கிச்சுலு
யார் இந்த சைஃபுத்தின்
கிச்சுலு? அமிர்தசரசைச் சேர்ந்த
வணிகரான குவாஜா அஜீஜுதீனுக்கு மகனாக 1888ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி பிறந்தார்
இவர். கல்வியில் சிறந்து விளங்கிய கிச்சுலு தொடக்க கல்வியை இந்தியாவிலும் உயர்கல்வியை
இங்கிலாந்தில் பயின்று பி.ஏ. பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
1912ம் ஆண்டு தன்னுடைய
24ம் வயதில் சட்டத்துறையில்
டாக்டர் பட்டம் பெற்ற கையோடு நாடு திரும்பிய கிச்சுலு இந்திய சுதந்திர போராட்ட களத்தில்
தன்னை இணைத்துக்கொண்டார்.
ரௌலட் சட்டத்தை எதிர்ப்பதற்கு
நாடெங்கும் சத்தியாகிரக சபைகள் அமைக்கப்பட்டன. பஞ்சாப் மாகாணம் சத்தியாகிரக செயலாளராக டாக்டர் கிச்சுலு நியமிக்கப்பட்டார்.
அந்த சமயம் ஆங்கிலேய
அரசு இனபாகுபாடு குறித்து ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து அவர் நண்பர்
சத்திய பாலுடன் இணைந்து போராட்டத்தை தொடங்கினார். இதனை தொடர்ந்து இரண்டு சதி வழக்கில்
இவர்களை கைது செய்தது ஆங்கிலேய அரசு. ஆதாரமின்றி கைது செய்யப்பட்டதால் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராட்டங்களை தொடர்ந்தனர்.
இந்நிலையில் மேடைகளில், பொது இடங்களில் உரை
நிகழ்த்தக்கூடாது என கிச்சுலுவிற்கும், சத்தியபாலுக்கும் தடை உத்தரவை ஆங்கிலேய
அரசு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவை மீறும்விதமாக பல்வேறு போராட்டங்களில் ஆவேசமாக
எழுச்சியூட்டும் உரையை கிச்சுலு நிகழ்த்தி சுதந்திர தாகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்.
இதனால் ஆத்திரமுற்ற ஆங்கில அரசு 1919 ஏப்ரல் 10 அன்று டாக்டர் சைஃபூதீன்
கிச்சுலு மற்றும் டாக்டர் சத்திய பால் ஆகிய இருவரையும் கைது செய்து அமிர்தசரசிலிருந்து
160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
தருமசாலா என்னும் இடத்திற்கு நாடு கடத்தினார்கள்.
ஜாலியன் வாலாபாக்
படுகொலையின் தொடக்கம்
சத்தியாகிரக தலைவர்களான
டாக்டர் கிச்சுலு மற்றும் டாக்டர் சத்தியபாலை கைது செய்ததை தாங்கிக்கொள்ள முடியாத மக்கள்,
அவர்களை விடுதலை செய்யக்கோரி
மிகப்பெரிய கவன ஈர்ப்பு மற்றும் கண்டன பேரணியை காவல்துறை ஆணையரின் மாளிகை நோக்கி நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக அகிம்சைவழியில்
சென்ற இப்பேரணியை சீர்குலைக்கும் வகையில் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது.
பேரணியில் காயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில்
சிகிச்சை அளிக்க மறுத்த ஐரோப்பிய பெண்மனி ‘ஈஸ்டன்’ மீது ஆத்திரம் கொண்ட
மக்கள் அவரை கொலை செய்தனர். மற்றொரு ஆங்கிலேயர் ‘ரொனால்டு’ என்பவரும் கொல்லப்பட்டார்.
இப்படுகொலையின் பின்னணியில் முகம்மது அக்ரம், முகம்மது அமின் ஆகியோர் கைது செய்யப்பட்டு மிகப்பெரும்
சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியான நிகழ்வுதான் ஜாலியன் வாலாபாக்
படுகொலை.
உருவப்படத்தை வைத்து
நடத்தப்பட்ட கூட்டம்
டாக்டர் கிச்சுலு
மற்றும் டாக்டர் சத்தியபால் கைது செய்யப்பட்ட இரண்டு நாளில் ஆங்கிலேய அரசின் அடக்குமுறை
நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என
கருதி ஏப்ரல் 13 அன்று மிகப்பெரிய
மக்கள் திரள் கூட்டம் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தின் முக்கிய
நோக்கம் டாக்டர் கிச்சுலு மற்றும் டாக்டர்
சத்திய பாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான். கூட்டத்திற்கு ஆரம்பத்தில்
“லாலா கணையாஹ்”
என்பவர் தலைமை தாங்குவார்
என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தலைமை தாங்க மறுத்து விட்டார்.
காரணம் அன்றைய பஞ்சாப்
மாநில கமிட்டியின் செயலாளராக இருந்த டாக்டர் கிச்சுலு தான் இக்கூட்டத்திற்கு தலைமை
ஏற்க தகுதியானவர். எனவே, அவர் இல்லை என்றாலும்
அவரின் புகைப்படத்தை வைத்து கூட்டம் நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது. அந்த அளவிற்கு
டாக்டர் கிச்சுலுவின் மீது பற்றும் மரியாதையும் கொண்டிருந்தனர் பஞ்சாப் மக்கள்.
ஏறத்தாழ இருபதாயிரம்
பேர் கலந்து கொண்ட அந்தக்கூட்டத்தில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளும் இருந்தனர். பெருவாரியான முஸ்லிம் மக்களும்
இக்கூட்டத்தில் அங்கம் வகித்தனர். அப்பொழுது அங்கு வந்த மாபாதகன் ஜெனரல் ரெஜினால்ட்
டயர் என்ற ராணுவ அதிகாரியின் உத்தரவின் பெயரில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்
ஆடு, மாடுகளை சுடுவதைப் போல இந்தியர்களை
சுட்டுத்தள்ளியது ஆங்கிலேய ராணுவம். ஏறத்தாழ அரை மணி நேரம் நடைபெற்ற இக்கோர சம்பவத்தில்
1650 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டது.
இத்துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 379 பேர் நிகழ்விடத்தில் இறந்தனர் என்பது அரசு தரப்பு தகவல். இன்னபிற தகவல்களின் அடிப்படையில்
1000 பேர் வரை கொல்லப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகின்றது.
இச்சம்பவம் நாடு முழுவதும்
மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறுகலான ஒரு வழிப்பாதை கொண்ட மைதானத்தில் கூடிய
மக்களை திட்டமிட்டே டயர் படுகொலை செய்தது கண்டிக்கத்தக்கது என ஆங்கிலேய அரசே அவரை கண்டித்தது.
இரண்டு தலைவர்களுக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் 379 பேர் உயிர் இழந்தது என்பது இந்திய வரலாற்றில் வேறு எங்கும் காண முடியாது. ஜாலியன் வாலாபாக் திடலில் திரண்ட மக்கள் இருபதாயிரம்
என்றால் அதில் முஸ்லிம்கள் ஐந்தாயிரத்திற்கும் மேல் என்ற தகவல் நமக்கு புதிதாக இருக்கும்.
துப்பாக்கி சூட்டில் முஸ்லிம்கள் பெருவாரியாக கொல்லப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட 379 பேரில் பாதிக்கு
பாதி முஸ்லிம்கள் ஆவர். அதில் பெரும்பாலான முஸ்லிம்களின் விவரம் பதிவு செய்யப்படவில்லை.
இதனிடையே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் வெளிவந்த “ரேடியன்ஸ் வீக்லி”
வார இதழ் தனக்கு கிடைத்த தகவல்களை கொண்டு ஜாலியன் வாலாபாக்கில் சுட்டுக்
கொல்லப்பட்ட 60 முஸ்லிம்களின் பெயர்
மற்றும் விலாசத்தை மட்டும் வெளியிட்டது.
ஜாலியன் வாலாபாக்
படுகொலைகளுக்குப் பின் பஞ்சாபின் ஆட்சியானது இராணுவத்தின் கைவசமானது. இராணுவம்‘அமிர்தசரஸ் சதி வழக்கு’
என்னும் பெயரில் ஒரு வழக்கைத்
தொடுத்தது. அந்த வழக்கில் டாக்டர் சைஃபுதீன் கிச்சுலு முதலாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.
இச்சதி வழக்கின் “கிச்சுலு ஒரு தீவிரவாதி.
புரட்சிக்காரர்களின் ஏஜெண்ட். ஆட்சியை கவிழ்க்க முயன்றவன், இராஜத் துரோகி. வன்முறையை தூண்டுபவர், கிளர்ச்சியாளர்களில் மிகவும் ஆபத்தானவர். ஆகவே,
கீழ்கண்ட பிரிவில் வழக்கு
பதியப்பட்டு இவரை தூக்கில் போட வேண்டும் என்றனர். ஆனால், நீதிபதிகள் ஐந்து
ஆண்டுகளுக்கான தண்டனையை கிச்சுலுவிற்கு உறுதி செய்தனர்.
நீதிமன்ற மேற்முறையீட்டில்
டாக்டர் விடுதலை செய்யப்பட்டார். 24 வயதில் தன்னுடைய
விடுதலை போராட்டத்தை தொடங்கிய டாக்டர் கிச்சுலு
71 வயது வரை நாட்டு மக்களுக்காக உழைத்து உயிர் நீத்தார்.
இன்று நம்மில் பலருக்கு
ஜாலியன் வாலாபாக் படுகொலை ஏன் எப்படி யாருக்காக நடைபெற்றது என்பது கூட தெரியாது. காரணம்,
உண்மை வரலாறு மூடிமறைக்கப்பட்டு
போலியான காரணங்களுடன் வரலாற்று திரிபுகளை இன்றைய பாடப் புத்தகங்களில் எழுதி விட்டனர்.
மீண்டும் நாம் சொல்கிறோம் இம்மண்ணின் விடுதலைக்காக தன்னுடைய சதவீதத்திற்கு அதிகமாக
முஸ்லிம்கள் உயிரை தியாகம் செய்திருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா
வந்திருந்த காந்தி விடுதலைப்போரை உத்வேகத்துடன் எடுத்துச் செல்வதற்கு ஜாலியன் வாலாபாக்
படுகொலை பின்புலமாக அமைந்திருந்தது என்பதையும் வரலாறு பதிவு செய்துள்ளது.
உதவிய நூல்கள்:
1. இந்திய விடுதலைப்
போரில் முஸ்லிம்கள் (வி.என். சாமி)
2. சரித்திரத்தை மாற்றிய
சதி வழக்குகள் (சிவலை இளமதி)
3. இஸ்லாமியர் குறித்து
வரலாற்றுத் திரிபுகள் (சிவசுப்ரமணியம்)
4. ஆஷ் கொலையும் இந்திய
புரட்சி இயக்கமும் (சிவசுப்ரமணியம்)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக