பதக் மியான் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்
இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை பலர் அறிந்திருக்கிறார்கள்.
இன்னும் பல தியாகங்கள் மக்கள் மத்தியில் பேசப்படாமல் இருக்கிறது. அப்படி அறிந்திடாத
ஒரு நிகழ்வை, வரலாற்றைதான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். அந்த வரலாற்றுக்கு வயது
100. தேசத் தந்தை காந்தி தனது சுதந்திர போராட்ட பயணத்தை துவங்கிய இடம் சம்பாரன் சத்தியாகிரகம்.
சம்பாரன் சத்தியாகிரகம்
சம்பாரன் மாவட்டத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளும், ஒப்பந்தத்
தொழிலாளர்களும் உணவுப் பயிர்களைப் பயிரிடாமல், காலனிய அரசின் கட்டாயத்தின் பேரில் அவுரி
முதலான பணப்பயிர்களை பயிரிட்டு வந்தனர். இதனால் அவர்களுக்குத் தேவையான உணவு கிடைக்கவில்லை.
மேலும் அவுரிப் பயிரினை மிகக் குறைந்த விலையில் அரசு ஆதரவு பெற்ற பண்ணையார்களுக்கு
விற்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனால் இம்மாவட்டத்தில் பஞ்சம் ஏற்படும் நிலை உருவானது.
விவசாயிகளின் துன்பங்களைப் பொருட்படுத்தாத காலனிய அரசு அவர்கள் விற்கும் அவுரி மீது
ஒரு புதிய வரியொன்றை விதித்தது.
காந்திஜி அப்பகுதி மக்களை
அரசுக்கு வரி கொடாமல் அறவழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டுமாறு ஊக்குவித்தார். காந்தியின்
வழிகாட்டுதலின் படி மக்கள் வரி கொடுக்க மறுத்தனர். மக்களிடையே கலகத்தைத் தூண்டினார்
என்று குற்றம் சாட்டிய அரசு காந்தியை சிறையில் அடைத்தது. ஆனால் வரிகொடாப் போராட்டம்
மேலும் வலுவடைந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். போராட்டக்காரர்களின் வேண்டுகோள்களை
ஏற்றுக்கொண்ட பண்ணையார்கள் அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி பஞ்ச காலம்
முடியும் வரை வரி வசூலும், வரி விகித உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டன. அவுரி பயிரிடுவோருக்கு
அதிக விலையும் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
இப்போராட்டத்தின் காரணமாக, சில நிறுவனங்கள் காந்தியின் மீது
மிகுந்த கோபத்தில் இருந்தன. ஆனால் அதனை வெளியில் காட்டாமல் இர்வின் என்ற ஆங்கிலேயே
மேலாளர் சம்பாரன் மாவட்டத்திலுள்ள மோதிஹாரி கிராமத்திற்கு காந்தியை விருந்திற்கு அழைத்தார்.காந்தியும் விருந்தை ஏற்று கொண்டார்.
நயவஞ்சகமாக இர்வின் ஒரு காரியத்தை செய்ய முனைந்தான். விருந்துக்கு
காந்தியை அழைத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தான். இந்த மாபாதக செயலுக்கு அவனுடைய
சமையல்காரனை பயன் படுத்த நினைத்தான். விஷம் கலந்த பாலை, பதக் மியான் என்ற சமையல்காரன்
காந்திக்கு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டான். உத்தரவை நிறைவேற்றாவிட்டால் தனது
உயிரே போகும் என்பதை அறிந்தும் காந்திக்கு பாலை கொடுத்த பதக் மியான், அதனை அவர் பருக
முற்பட்ட போது தட்டி விட்டார்.
காந்தியடிகள் என்னவென்று புரியாமல் திகைக்கிறார். அப்பொழுது
அந்த ஆங்கிலேய அதிகாரி பதக் மியானை அடித்து துவைத்து எடுக்கிறார். அதனை வேடிக்கை பார்த்த
நபர்களும் என்ன விபரம் என்று புரியாமல் திகைத்து நிற்கின்றார்கள். காந்தியை கொலை செய்ய
போடப்பட்ட திட்டத்தை அங்கே போட்டுடைத்த பதக் மியான், காந்தியை அவ்விடத்தை விட்டும்
உடனே செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அதிர்ச்சியில் உறைந்த காந்தி, அங்கிருந்து வெளியேறினார்.
இந்த சம்பவத்தின் போது காந்தியுடன் இருந்தவர், இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பின்னர்
பதவியேற்ற ராஜேந்திர பிரசாத். இருவரும் பதக் மியானுக்கு நன்றி தெரிவித்தனர்.
வெள்ளைக்கார எஜமானுக்கு மாறு செய்ததற்காக பதக் மியான் மிகப்பெரும்
விலையை கொடுத்தார். வேலையில் இருந்தும் நீக்கப்பட்டவர் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளானார்.
பொய் வழக்கு போடப்பட்டு சில காலம் சிறையில் தள்ளப்பட்டார். மோதிஹாரிக்கு அருகில் உள்ள
சிஸ்வா அஜ்ஜரி கிராமத்தில் அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. இறுதியில் அந்த ஊரைவிட்டே
அவர் துரத்தப்பட்டார்.
ராஜேந்திர பிரசாத் சம்பாரன் வருகை
இச்சம்பவம் நடந்து 33 ஆண்டுகள் கழித்து நாட்டின் முதல் ஜனாதிபதியாக
சம்பாரன் தாலுகாவிற்கு உட்பட்ட மோதிகிரிக்கு ராஜேந்திர பிரசாத் அவர்கள் வருகை புரிகிறார்கள்.
ரயில் நிலையத்தில் ராஜேந்திர பிரசாத் இறங்கியவுடன் ஒரு முகத்தை தேடுகிறார். அந்த நபரும்
ராஜேந்திர பிரசாத் அவர்களை நோக்குவதை தெரிந்து கொண்டு, ரயில் நிலைய வரவேற்பிற்கு மத்தியில்
அவரை அழைத்து, 1917 ஆம் ஆண்டு ஆங்கிலேயே அதிகாரி காந்தியை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டதையும்
அதனை தடுத்தது இந்த மகான் பதக் மியான் அன்சாரி தான் என்றும் மக்கள் மத்தியில் அறிவிக்கிறார்.
இந்த செயலுக்காக அவர் மிகப் பெரிய பொருளாதார இழப்பை சந்தித்திருக்கிறார்.
அவருக்கு இந்த நாடு அதிகமாக கடமை பட்டிருக்கிறது என்று சொன்னது மட்டுமல்லாமல் மாவட்ட
ஆட்சியாளருக்கு ஒரு உத்தரவையும் போடுகிறார். கிழக்கு மற்றும் மேற்கு சம்பாரன் உட்பட
ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலிருந்து 50 ஏக்கர் நிலத்தை பதக் மியான் மற்றும்
அவர்கள் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். அதுவே நாடு அவர்களுக்கு செய்யும் பிரதி
உபகாரம் என்று கூறிச் சென்றார். ஜனாதிபதி அவர்களின் உத்தரவு என்பது சாதாரணமானதல்ல.
நாட்டின் முதல் குடிமகன் இட்ட உத்தரவு 67ஆண்டுகள் ஆகியும் நிறைவேறாமல், அதிகாரிகளின்
பொடுபோக்குத்தனத்தாலும் மெத்தனத்தாலும், ஆட்சியாளர்களின் அரசியல் பிழைப்புவாதத்தாலும்
வெற்று காகிதமாக வலம்வந்து கொண்டிருக்கிறது.
பதக் மியான் மரணம்
1958 ஆண்டு பதக் மியான் அவர்கள் மரணம் அடைந்தார். அவர் இறந்த
போது, ஜனாதிபதியின் உத்தரவு குறித்து மக்கள் மத்தியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. உடனே
50 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு பதிலாக வெறும் 6 ஏக்கர் நிலத்தை பதக் மியான் குடும்பத்தினருக்கு
பீகார் அரசு 1959 இல் வழங்குகிறது . மோதிஹாரியிலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில்,
நேபாள நாட்டு எல்லையை ஒட்டி உள்ள ஏக்வா பார்சனி என்னும் கிராமத்தில் இந்த நிலம் வழங்கப்பட்டது.
அந்த நிலமும் வால்மீகி டைகர் ரிசர்வ் வனப்பகுதியின் கீழ் வருகிறது. இன்றைக்கும் பதக்
மியான் குடும்பத்தினர் நதி கரையோரம், மழை அதிகமாகி வெள்ளம் அதிகமாக பெருக்கெடுத்து
ஓடும் நாட்களில் ஒரு ஆபத்தான வாழ்க்கையை காட்டு
விலங்குகளின் தாக்குதலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.
பிரதிபா பாட்டீல் மீண்டும் உத்தரவு
2010ல், பிரதிபா பாட்டீல் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த பொழுது,
பதக் மியானின் தியாகத்தை கேள்விப்பட்டு, முந்தைய உத்தரவை உடனடியாக நிறைவேற்றும்படி
மாவட்ட நிர்வாகத்திற்கு ஆணை பிறப்பித்தார். ஆனால் 15 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக
பணியாற்றக்கூடிய நிதிஷ் குமார் அரசும் அதிகாரிகளும் அதனை காதில் வாங்க வில்லை. சம்பாரன்
(1917 &-2017) நூற்றாண்டு விழா சமீபத்தில் கொண்டாடப் பட்டது. அந்த விழாவிற்கு பதக்
மியானின் குடும்பத்தினர் அழைக்கப் படவில்லை என்றும் நூற்றாண்டு சிறப்பு மலரில் பதக்
மியான் குறித்து குறிப்பிட நிதிஷ் குமார் அரசிற்கு மனமில்லை என்று ம்சமீபத்தில் தி
வீக் இதழுக்கு அளித்த பேட்டியில் பதக் மியானின் பேரன் அலாவுதீன் கூறியிருந்தார்.
''காந்தியை கொன்றவனைத்தான்
வரலாறு மறைக்கிறது என்றால் காந்தியை காப்பாற்றியவரின் பெயருமல்லவா இங்கு மறைக்கப் படுகிறது''!
காந்தியை காப்பற்றி தன்னுடைய வேலைவாய்ப்பையும் பொருளாதாரத்தையும் வீட்டையும் இழந்து
சொந்த ஊரை விட்டும் துரத்தப்பட்ட அந்த ஏழைக்கு இன்னும் நிவாரணமும் கிடைக்கவில்லை, அங்கீகாரமும்
கிடைக்கவில்லை. முஸ்லிம்களின் தியாக வரலாற்றை பாசிசவாதிகள் மட்டுமல்ல, சோசியலிசம் பேசுபவர்களும்
கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்கு பதக் மியான் சாட்சியாக இருக்கிறார்.
புதிய விடியல் ஆகஸ்ட் 2107

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக