முஸாஃபர் நகர்: உத்தரப் பிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கலவரத்தை தூண்டிய பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர்நகரிலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் சமீபத்தில் வகுப்புக் கலவரம் வெடித்தது. இதில், ஏராளமானோர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் இப்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. காதிர் ராணா, அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நூர் சலீம், மெüலானா ஜமீல், பாஜக எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், பர்தேந்து சிங், காங்கிரஸ் தலைவர் சயீத் உஸ்மான், பாரத விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்பட 16 பேரைக் கைது செய்ய முசாஃபர்நகர் நீதிமன்றம் புதன்கிழமை வாரண்ட் பிறப்பித்தது.இந்நிலையில், முஸாஃபர்நகரில் வன்முறையைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் ராணாவை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கலவரத்துக்குப் பின் காவல்துறையினர் கைது செய்துள்ள முதல் அரசியல் தலைவர் சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் ராணா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 188 (தடை உத்தரவை மீறுவது), 153 ஏ (மத உணர்வுகளைத் தூண்டுவது), 335 (தூண்டிவிட்டு படுகாயம் ஏற்படச் செய்வது) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக