புதன், 1 நவம்பர், 2017

தேசியத்திற்குள் மத தேசியம்

”இந்திய சுதந்திரத்திற்கு்பிறகு 1948-ல் அமைக்கப்பட்ட  தார் கமிஷன் (Dar Commission)  வலிமையான அதிகாரம் குவிக்கப்பட்ட நடுவன் அரசு உருவாக்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் மொழிப்பெரும்பாண்மைக்கொண்ட மாநிலங்களை பிரிப்பதன் மூலம் நிர்வாகத்தை பிரித்து வெடித்துச் சிதறிவிடும் போக்கைக் கொண்ட மொழிவாரி மாநில சச்சரவுகளுக்கு தீர்வு ஏற்படுத்தலாம். மேலும், தேசிய உணர்வை வலுப்படுத்துவதன் மூலம் இந்திய தேசத்தை கட்டமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. (Reorganisation of States in India - Mahendra Prasad Singh, Economic & Political Weekly - March 15, 2008).  இப்பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்திய மொழிவாரி தேசியங்களின் அடிப்படையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.

இவற்றிலிருந்து, இந்திய தேசியத்திற்குள் மத தேசியம் (religious nationalism) மற்றும் இன தேசியம் (ethnic nationalism) என்ற  இரண்டுவகையான தேசியம் இயக்கமடைவதை அவதானிக்கலாம். இவை இரண்டும் இந்திய கூட்டமைப்பில் உள்முரணாகவும் ஒன்றை ஒன்று எதிர்ப்பதாகவும், பல நேரங்களில் ஈடுசெய்து கொள்வதாகவும் உள்ளது. இந்தியா மத தேசியத்தை முன்னிறுத்த, தமிழகம் போன்ற தனித்ததான பிராந்திய தேசியங்கள் இனதேசியத்தை முன்வைப்பதாக உள்ளன. மத தேசியம் முன்வைக்கும் இந்திய தேசிய விசவாசமே  தேசப்பற்று என்கிற வடிவத்தை எடுக்கிறது.

இந்தியாவில் ஐரோப்பிய சமூகங்களைப்போல குடியாண்மை தேசியம் (civic nationalism) என்பது வளராமல் மதவாத தேசியம் போன்ற ஒன்று (இதனை மத-தேசியம் என்று குறிக்கலாம்) வளர்நது வந்துள்ளது. இது இந்திய தேசியத்தின் ஒரு தனிச்சிறப்பான குணமாக கொள்ளலாம். காரணம், ஐரோப்பியாவில் நடந்த போர்களில் ஈடுபட்ட இரு பிரிவினரும் தங்களது கிறித்தவ மதப்பிரிவுகளின் அடிப்படையில் எதிரில் உள்ளவருடன் போரிட மறுத்தபோது, -பாரதக் கிருஷண பரமாத்மாப்போல- அதிகாரம் தேசியக் குடிமகன் என்பவன் மதத்தைவிட நாட்டை, தனது இனத்தை, அதற்கான அரசை நேசிக்க வேண்டும் என்பதான விதிமுறையை கட்டமைத்தது. தேசியம் என்பதன் அடிப்படையில் உள்ள இந்த மதச்சார்பின்மை, இந்திய தேசியத்தில் பெயரளவில் மட்டுமே பின்பற்றப்படுவதையும், இந்த மததேசியத்தையே “பண்பாட்டு தேசியமாக”  இந்துத்துவா சக்திகள் முன்வைப்பதையும் அவதானிக்கலாம்.

இந்திய தேசியம் பற்றி பேசும்போது, இந்துத்துவா முன்வைக்கும் "பண்பாட்டு தேசியம்" குறித்தும் விளங்கிக் கொள்வது அவசியம். அடிப்படையில் இது இனதேசியத்தை மறுத்து அங்கு ஒற்றைத்தன்மையான மதம் சார்ந்த குறிப்பாக உயர்சாதி பார்ப்பனியத்தின் வேதக்கலாச்சாரத்தை முன்வைப்பதை உணரலாம். இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை மறுப்பதும், இத்தேசிய இனங்கள் எல்லாம் இந்து மதம் என்கிற பார்ப்பனிய மேலாண்மை வேதமதத்தின் ஒற்றைப் பண்பாட்டை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்பதான இந்துமத மேலாதிக்கப் பண்பாடு முன்வைக்கப்படுகிறது. இந்த "இந்துப்பண்பாடு்"  அடிப்படையில் இந்தியா என்கிற தேசம் முழுமைக்குமானதா? என்பதும் குறிப்பாக இந்துமதம் என்கிற அமைப்பிற்குள்ளே அடையாளப்படுத்தப்படும் பல சாதிகளின் பண்பாட்டையும் உள்ளடக்கியதா? தலித்போன்ற விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பண்பாட்டையும் உள்ளடக்கியதா? என்பதும் விவாதத்திற்குரிய முக்கிய புள்ளிகள். தேசியம் என்ற சொல்லை குழப்பியடிக்கும் இக்கூற்றை புரிந்து கொள்ளவே இதனை இங்கு சொல்ல வேண்டியதாக உள்ளது. ”

- ’கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும்.’ என்ற தலைப்பில் தீராநதியில் செப்டம்பர் 2008 ல் எழுதப்பட்ட கட்டுரையின் சில பத்திகள். முழுக்கட்டுரையும் புலம் வெளியீடாக வந்த எனது ”நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்” தொகுப்பில் உள்ளது.
நன்றி ஜமாலன் தமிழ்

கருத்துகள் இல்லை:

ஷெர்னியும் ஆவ்னியும்!

நடிகை வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் , ‘ ஷெர்னி ’ . அமித் மஸூர்கர் இயக்கியுள்ள இப்படத்தில்...